எமது நாடு எதிர்கொள்ளுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தீர்வினைக்காண முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் தேர்தல்கள் நடைபெறுகின்றபோது, மக்கள் தங்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவார்களாயின், தொடர்ந்து வருகின்ற ஐந்து வருடங்களில் நாடு சுபீட்சமான நிலையை அடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிறுவனர் ப. செபராஜாசிங்கம் அவர்களின் நினைவு தினம் மற்றும் பரிசளிப்பு விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்!
எமது தமிழ் தலைவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் தோல்விகண்ட நிலையில் தான் அன்றைய காலகட்டத்தில் தென்னிலங்கையில் ஆட்சியில் இருந்தவர்களினால் எங்களுடைய கைகளில் ஒரு ஆயுதப் போராட்டம் வலிந்து கொடுக்கப்பட்டது.
ஆனால் அந்த ஆயுத போராட்டமும் ஒரு கட்டத்துக்கு பிறகு திசை திரும்பி பலவீனப்பட்டு போய்விட்டது.
இவ்வாறு பலவீனப்பட்டு போய்க்கொண்டிருந்த பொழுதுதான் 1987 களில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்ற ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.
அதை நாங்கள் பின்பற்றி இருப்போமாக இருந்தால் இன்று நாம் பல மடங்கு முன்னேற்றகரமான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருந்திப்போம் என்று நினைக்கின்றேன். ஆனால் அது வீணடிக்கப்பட்டுவிட்டது.
நாட்டில் நடைபெற்ற அழிவு யுத்தம் காரணமாக தேவையற்ற பொருளாதார செலவுகள் மற்றும் யுத்தத்துக்காக வெளிநாடுகளில் பெற்ற கடன்களும் அதைவிட நாட்டினுடைய ஏனைய தேவைகளுக்காக பெறப்பட்ட கடன்களும் சரியான ஒரு பொறிமுறையை நோக்கி கையாளப்படாது போய்விட்டது. இதனால் நாட்டை முன் கொண்டு செல்ல முடியாத நிலைக்கு எமது நாடு தள்ளப்பட்டது.
இவ்வாறான நெருக்கடி நிறைந்த காலகட்டத்தில் இந்த நாட்டை பொறுப்பெடுத்த இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை சரியான பாதையில் கொண்டு சென்று நிலமைகளை சீர்செய்து வருகின்றார். அதில் வெற்றியும் கிடைத்து வருகிறது.
அந்தவகையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இன்றைய ஜனாதிபதி வெற்றி பெறுவாராக இருந்தால், தொடர்ந்து வருகின்ற ஐந்து வருடத்தில் நாடு இன்னும் பல மடங்கு முன்னோக்கி செல்லும் என்பது என்னுடைய நம்பிக்கை.
பொதுவாக நான் என்னுடைய அனுபவங்களை என்னுடைய நம்பிக்கையைதான் எப்பொழுதும் வெளிப்படுத்தி வருகின்றேன்.
என்னுடைய வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஏறக்குறைய 15 வருட ஆயுதப் போராட்ட வரலாறும் 30 வருடத்துக்கு மேலான நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் வரலாறும் அதனூடான அனுபவங்களும் எனக்கு இருக்கின்றது.
இதேநேரம் அடுத்த அரசாங்கங்கள் வந்தாலும் என்னுடைய நிலைமை இவ்வாறானதா?
அத்துடன் எனது அணுகுமுறையானது வெறுமனே உசுப்பேற்றும் அரசியலை பேசுவதுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருந்து வெறும் வாக்குககளை அபகரரிப்பதற்கான அரசியல் இல்லை.
நான் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடனே நல்லிணக்கதத்தை வளர்த்து வருகின்றேன். அதில் வெற்றி காணமுடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு என்றும் தெரிவித்த அமைச்சர் இந்த பாடசாலையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான அனைத்து செயற்பாடுகளிலும் பாடசாலை சமூகத்தடன் சேர்ந்து தன்னுடைய பங்களிப்பும் முழுமையாக கிடைக்கப்பெறும் என்றும் உறுதிபடத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது!