தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

தொடரின் வரவேற்பு நாடான இந்தியாவின் வெற்றி அலைக்கு முடிவு கட்டுமா நியூஸிலாந்து?

2023ன் ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 13ஆவது அத்தியாயத்தின் லீக் சுற்றில் 9 வெற்றிகளுடன் தோல்வி அடையாமல் இருக்கும் ஒரே ஒரு அணியான இந்தியா மிகுந்த எதிர்பார்ப்புடன் நியூஸிலாந்தை மும்பை வான்கடே விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (15) நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் இந்த இரண்டு அணிகளும் அரை இறுதியில் சந்தித்துக்கொண்டபோது நியூஸிலாந்து 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. மழை காரணமாக அப் போட்டி இரண்டு தினங்கள் நடத்தப்பட்டிருந்தது.

எனவே அந்த நினைவுகளுடன் பெரும்பாலான வீரர்கள் இன்றைய அரை இறுதியை எதிர்கொள்ளவுள்ளனர்.

கபில்தேவ் தலைமையில் 1983இல் முதல் தடவையாக உலக சம்பியனான இந்தியா, 28 வருடங்களின் பின்னர் எம். எஸ். தோனி தலைமையில் 2ஆவது தடவையாக உலக சம்பியனாகியிருந்தது.

இப்போது ரோஹித் ஷர்மா தலைமையில் 3ஆவது உலகக் கிண்ணத்திற்கு குறிவைத்து விளையாடி வரும் இந்தியா, தனது வெற்றி அலையைத் தொடரும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை அதன் வெற்றி அலைக்கு கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து முடிவு கட்டலாம் எனவும் கருதப்படுகிறது.

இம்முறை உலகக் கிண்ண லீக் சுற்றில் அவுஸ்திரேலியாவை 6 விக்கெட்களாலும் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட்களாலும் பாகிஸ்தானை 7 விக்கெட்களாலும் பங்களாதேஷை 7 விக்கெட்களாலும் நியூஸிலாந்தை 4 விக்கெட்களாலும் இங்கிலாந்தை 100 ஓட்டங்களாலும் இலங்கையை 302 ஓட்டங்களாலும் தென் ஆபிரிக்காவை 243 ஓட்டங்களாலும் நெதர்லாந்தை 160 ஓட்டங்களாலும் மிக இலகுவாக இந்தியா வெற்றிகொண்டிருந்தது.

துடுப்பாட்டத்தில் விராத் கோஹ்லி 2 சதங்கள், 5 அரைச் சதங்கள் உட்பட மொத்தமாக 594 ஓட்டங்களைக் குவித்து முன்னிலையில் இருப்பதுடன் அவரது சராசரி பிரமிக்கும் வகையில் 99.00 ஆக அமைந்துள்ளது.

அவரை விட ரோஹித் ஷர்மா ஒரு சதம், 3 அரைச் சதங்களுடன் 503 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு சதம், 3 அரைச் சதங்களுடன் 421 ஓட்டங்களையும் கே. எல். ராகுல் ஒரு சதம், ஒரு அரைச் சதத்துடன் 347 ஓட்டங்களையும் ஷுப்மான் கில் 3 அரைச் சதங்களுடன் 270 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் அசத்தியுள்ளனர்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 17 விக்கெட்களையும் மொஹமத் ஷமி இரண்டு 5 விக்கெட் குவியல்கள் உட்பட 16 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 16 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 14 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 12 விக்கெட்களையும் கைப்பற்றி எதிரணிகளுக்கு சிரமத்தைக் கொடுத்திருந்தனர்.

இதேவேளை, தனது முதல் நான்கு போட்டிகளில் இங்கிலாந்தை 9 விக்கெட்களாலும் நெதர்லாந்தை 99 ஓட்டங்களாலும் பங்களாதேஷை 8 விக்கெட்களாலும் ஆப்கானிஸ்தானை 149 ஓட்டங்களாலும் வெற்றிகொண்ட நியூஸிலாந்து 5ஆவது போட்டியில் இந்தியாவிடம் 4 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிடம் 5 ஓட்டங்களாலும் தென் ஆபிரிக்காவிடம் 190 ஓட்டங்களாலும் பாகிஸ்தானிடம் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 21 ஓட்டங்களாலும் நியூஸிலாந்து தோல்வி அடைந்தது. இதன் காரணமாக அதன் அரை இறுதி வாய்ப்பு சந்தேகத்திற்கிடமானது.

எனினும் கடைசி லீக் போட்டியில் இலங்கையை 5 விக்கெட்களால் வெற்றிகொண்டதன் மூலம் நியூஸிலாந்து 3ஆவது தொடர்ச்சியான தடவையாக உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இந்தியாவுடன் ஒப்பிடும் அளவுக்கு நியூஸிலாந்தின் துடுப்பாட்டம், பந்துவீச்சு என்பன சிறப்பாக அமையவில்லை.

நியூஸிலாந்து சார்பாக ரச்சின் ரவிந்த்ரா 9 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள், 2அரைச் சதங்களுடன் 565 ஓட்டங்களைக் குவித்து முன்னிலையில் இருக்கிறார்.

அவரை விட டெரில் மிச்லெ; ஒரு சதம், 2 அரைச் சதங்கள் உட்பட 418 ஓட்டங்களையும் டெவன் கொன்வே ஒரு சதம் உட்பட 359 ஓட்டங்களையும் க்ளென் பிலிப்ஸ் 2 அரைச் சதங்களுடன் 244 ஓட்டங்களையும் வில் யங் 2 அரைச் சதங்களுடன் 206 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளனர்.

உபாதை காரணமாக 6 போட்டிகளைத் தவறவிட்ட அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 2 அரைச் சதங்களுடன் 187 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்துவீச்சில் மிச்செல் சென்ட்னர் 16 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் 13 விக்கெட்களையும் மெட் ஹென்றி 11 விக்கெட்களையும் லொக்கி பேர்கசன்; 10 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந் நிலையில் இரண்டு அணிகளினதும் போட்டி முடிவுகள், தனிப்பட்ட வீரர்களின் பெறுதிகள் ஆகியவற்றை ஒப்பிடும்போது இந்தியா மிகச் சிறந்த நிலையில் இருப்பதை அவதானிக்கலாம். இதன் காரணமாகவும் சொந்த மண்ணில் விளையாடுவதன் காரணமாகவும் இந்தியா வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என அனுமானிக்கப்படுகிறது.

ஆனால், நான்கு வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் போன்று நியூஸிலாந்து வெற்றிபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இரண்டு அணிகளும் இறுதிப் போட்டி வாய்ப்பைப் பெற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)