தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோதமாக மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் குடியேறியவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இன்று  (13) ஆம் திகதி திங்கட்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த மாதம் 22 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று  தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும்  இன்று நீதிமன்றில் ஆஜராகினர். மகாவலி அதிகார சபை சார்பாக  அரச சட்டத்தரணி டில்கானி டி சில்வா ஆஜராகியிருந்தார். 

இந்நிலையில் அதிகாரம் பெற்ற அதிகாரிகளினால் வழங்கப்பட்ட  எந்த  ஆவணமும்  அத்துமீறி குடியேறியவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களினால் நீதிமன்றுக்கு  சமர்ப்பிக்கப்படாததால் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறிய குறித்த 13 பேரையும் வெளியேற்றுமாறு நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுமாறு கோரி அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் 60வது நாளாகவும் இன்றும் போராட்டம் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.