இரவு 11.47 மணியளவில் நேபாளத்தின் கர்னாலி மாகாணம் - ஜஜர்கொட் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பதிவான சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக இருந்ததாக நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் பின்னர் அதை 5.7 ரிக்டர் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 5.6 ரிக்டர் என்றும் மதிப்பிட்டுள்ளன.
சுமார் 190,000 மக்கள்தொகை கொண்ட மலைப்பாங்கான மாவட்டமான ஜாஜர்கோட்டின் மையப்பகுதிக்கு அருகில் இவ் அனர்த்தம் பதிவாகியுள்ளது.
நேபாளத்தின் பிரதமர் புஷ்ப கமல் தஹல், நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமைச் சேதங்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததோடு, உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடங்க பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தனது டுசிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜாஜர்கொட்டானது, தலைநகர் காத்மாண்டுவிலிருந்து மேற்கே 500 கிலோ மீற்றர் (310 மைல்) தொலைவில் உள்ளது. அதனை அண்மித்த மாவட்டங்களிலும் இதன் அதிர்வு உணரப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.