இலங்கையில் நேற்று பலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாடு மற்றும் உடன்நிற்பை வெளிப்படுத்தியும், போர்நிறுத்தம் மற்றும் சமாதானத்தை வலியுறுத்தியும் நேற்று செவ்வாய்க்கிழமை (07) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் அடைமழைக்கு மத்தியிலும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
ஹமாஸ் அமைப்பினால் கடந்த 7 ஆம் திகதி தென் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் நீட்சியாக கடந்த ஒரு மாதகாலமாக காஸாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திவரும் தொடர் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையான சிறுவர்கள் உள்ளடங்கலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகளின் அரசாங்கங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவளித்துவருவதுடன் அதன் மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறியுள்ளன. இருப்பினும் மேற்குறிப்பிட்ட நாடுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் எவ்வித இன, மத, மொழி பேதங்களுமின்றி சகல மக்களும் ஒன்றிணைந்து இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கான வன்மையான கண்டனத்தையும், பலஸ்தீன மக்களுடனான தமது உடன்நிற்பு மற்றும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்திவருகின்றனர்.
அந்தவகையில் கடந்த சில வாரங்களாக இலங்கையிலும், குறிப்பாக தலைநகர் கொழும்பில் பலஸ்தீன மக்களுக்கான ஆதரவையும், உடன்நிற்பையும் வெளிப்படுத்தும் வகையிலான கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதன் நீட்சியாக 'வீ ஆர் வன்' அமைப்பின் ஏற்பாட்டில் 'யுத்தம் வேண்டாம்' எனும் தொனிப்பொருளிலான அமைதி மாநாடொன்று நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் ஆரம்பமான இம்மாநாட்டில் சிறுவர்கள் உள்ளடங்கலாக பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டதுடன், சர்வ மதத்தலைவர்களும், எவ்வித கட்சி பேதங்களுமின்றி சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம், ரஞ்சித் மத்தும பண்டார, எரான் விக்ரமரத்ன, சம்பிக்க ரணவக, நளின் பண்டார, முஜிபுர் ரகுமான், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸாத் சாலி உள்ளிட்ட பலரும், இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட்டும் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.
அதன்படி மாநாட்டின் தொடக்கத்தில் காஸாவில் இஸ்ரேலியப்படைகள் நடத்திவரும் தாக்குதல்களால் உயிரிழந்தோருக்கான மௌன அஞ்சலி மற்றும் பிரார்த்தனை இடம்பெற்றதுடன், அதனைத்தொடர்ந்து பல வருடங்களாக நீடிக்கும் இஸ்ரேல் - பலஸ்தீன விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அதன்பின்னர் மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகாலப் போரினால் ஏற்பட்ட அழிவுகளையும், இழப்புக்களையும் நினைவுகூர்ந்ததுடன், தாம் யுத்தத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சுமார் அரை நூற்றாண்டு காலமாக பலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயற்பட்டுவந்திருப்பதாகவும், தற்போது காஸாவில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையான சிறுவர்கள் உயிரிழந்திருப்பது தமக்கு மனவேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் அமைதியும் சமாதானமும் நிலைநாட்டப்படவேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், இலங்கை போன்ற சிறிய நாடுகளின்மீது மாத்திரம் மனித உரிமைகளைத் திணிக்காமல் அதனை உலகின் பலம்பொருந்திய நாடுகளும் மீதும் பிரயோகிக்கவேண்டும் என்றார்.