தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமிருந்து இலங்கை திறைசேரிக்கு 07 பில்லியன் ரூபா வழங்கி வைப்பு!

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 07 பில்லியன் ரூபாக்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 04 பில்லியன் ரூபாவிற்கான காசோலை புதன்கிழமை (29) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அவசியமான மருந்துப் பொருட்கள் கொள்வனவு, அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவு, உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஈட்டிய மேலதிக நிதியே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

மேற்படி 07 பில்லியன் ரூபாவில் 03 பில்லியன் ரூபா ஏற்கனவே ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டதோடு, அதற்கு இணையாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காகவும் 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.

இதற்கு முன்னரான காலப்பகுதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 3382 மில்லியன்களை வழங்கியிருந்தாலும் ஒரு வருடத்தில் 07 பில்லியன் ரூபாவை வழங்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர். பி. ஏ. விமலவீர, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் ஹில்மி அஸீஸ் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2023ஆம் ஆண்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பிரதான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்.

இந்நாட்டின் முறைசாரா வகையில் தொழில்களில் பணிபுரிபவர்களுக்கு கௌரவம் அளித்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக அவர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் “கரு சரு” வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர் சந்தை தொடர்பான தகவல் கட்டமைப்புடன் அவர்களை இணைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வெளிநாட்டுப் பணம் வருவதை அதிகரிப்பதற்காக, வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர் சங்கம், ஸ்மார்ட் கிளப் வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தொழில்முறை வழிகாட்டல் நடவடிக்கைகள் மற்றும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுதிப்பத்திர முறைமையை அறிமுகம் செய்தல் தொடர்பான விடயங்களை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கடந்த 18 மாதங்களில் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுப் பணமாகப் பெற முடிந்ததாகத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கும், தொழிலுக்காக வெளிநாட்டு செல்வோருக்காக விமான நிலையத்தில் தனியான பிரிவை அமைப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களின் பணம் இலங்கைக்கு அந்நிய செலாவணி பெறுவதற்கான முக்கியமான மூலங்களில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையிலான அமைச்சின் வேலைத்திட்டத்தை பாராட்டியதுடன், புதிய வேலைவாய்ப்பு பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக தொழிலாளர் சட்டங்களை திருத்த எடுக்கும் நடவடிக்கைகளையும் பாராட்டினார்.