கிழக்கு மற்றும் வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 13.11.2023 முதல் 18.11.2023 பிற்பகல் வரை பல பகுதிகளுக்கும் கன மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
இவ்வாண்டுக்கான வட கீழ் பருவ மழை தொடர்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இவ்வாண்டுக்கான வட கீழ் பருவ மழையின் முதல் சுற்று நேற்று (10) முடிவுக்கு வந்தது.
இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மழையற்ற வானிலை தொடங்குகின்றது ( எனினும் சில பகுதிகள் சிறிய அளவிலான மழையைப் பெறும்).
எதிர்வரும் 13.11.2023 வரை இந்நிலை தொடரும். இவ்வாண்டுக்கான வடகீழ் பருவத்தின் முதலாவது தாழமுக்கம் எதிர்வரும் 13.11.2023 திகதியளவில் வங்காள விரிகுடாவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே எதிர்வரும் 13.11.2023 பிற்பகல் முதல் 18.11.2023 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக 14, 15, 16 நவம்பர் 2023 திகதிகளில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை முதல் மிகக் கனமழை வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எனவே விவசாயிகள் நாளை முதல் 13ம் திகதி காலை வரையான காலப்பகுதியில் களை நாசினி தெளித்தல், உரம் இடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என்றுள்ளது.