தலைப்புச் செய்திகள்

6/recent/ticker-posts

Header Ads Widget

விராட் கோஹ்லி உலக சாதனை உட்பட இரண்டு சாதனைகள் : ஷமியின் 5 விக்கெட் குவியலின் உதவியுடன் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இந்தியா!


கோஹ்லியின் உலக சாதனை உட்பட இரண்டு சாதனைகளை நிலைநாட்ட, மும்பை வான்கடே விளையாட்டரங்கில் புதன்கிழமை (15) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில்  70 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா, உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராத் கோஹ்லி குவித்த உலக சாதனை மிகு 50ஆவது சதம் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் குவித்த சதம், ஷுப்மான் கில் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் ஷமியின் 5 விக்கெட் குவியல் என்பன இந்தியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்களைக் குவித்த முதலாவது வீரர் என்ற உலக சாதனையையே விராத் கோஹ்லி அப் போட்டியில் நிலைநாட்டினார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு சொந்தமாகவிருந்த 49 சதங்கள் என்ற சாதனையை கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதம் குவித்து சமன் செய்த விராத் கோஹ்லி, அந்த சாதனையை புதன்கிழமை கடந்து புதிய உலக சாதனை நிலைநாட்டினார்.

சச்சின் டெண்டுல்கர் 452 இன்னிங்ஸ்களில் 49 சதங்களைக் குவித்திருந்தார். ஆனால் விராத் கோஹ்லிக்கு 50 சதங்களைப் பூர்த்தி செய்ய 279 இன்னிங்ஸ்களே தேவைப்பட்டது.

அப் போட்டியில் 117 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்த விராத் கோஹ்லி உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு சாதனையை நிலைநாட்டினார்.

இந்த உலகக் கிண்ணத்தில் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் விராத் கோஹ்லி மொத்தமாக 701 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் ஓர் உலகக் கிண்ண அத்தியாயத்தில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனைக்கு விராத் கோஹ்லி சொந்தமானார். இப்போதைக்கு அவரது சராசரி 116.83ஆக இருக்கிறது.

2003 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் சச்சின் டெண்டுல்கர் 11 இன்னிங்ஸ்களில் 673 ஓட்டங்களைப் பெற்றிருந்தார. அதுவே முந்தைய சாதனையாக இருந்தது.

இந்த இரண்டு சாதனைகளையும் சச்சின் டெண்டுல்கரின் முன்னிலையில் விராத் கோஹ்லி நிலைநாட்டியமை விசேட அம்சமாகும்.

அத்துடன் இந்த உலகக் கிண்ண தொடரில் மொஹமட் ஷமி தனது 3 ஆவது 5 விக்கெட் குவியலைப் பெற்றுக்கொண்டார்.

மும்பையில் நடைபெற்ற உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 397 ஓட்டங்கைளப் குவித்தது.

உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டி ஒன்றில் ஓர் அணியினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகவும் இது பதிவானது.

துடுப்பாட்டத்தில் முன்வரிசை வீரர்கள் அனைவரும் கணிசமான ஓட்டங்களைப் பெற்று இந்தியாவின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 50 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ரோஹித் ஷர்மா 47 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து ஷுப்மான் கில்லும் விராத் கோஹ்லியும் 2ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தசைப் பிடிப்புக்குள்ளான கில் 79 ஓட்டங்களுடன் தற்காலிக ஓய்வுபெற்றார்.

அதன் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் அதே விக்கெட்டில் மேலும் 163 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 327 ஓட்டங்களாக உயர்த்திய விராத் கோஹ்லி 117 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி குவித்த 3ஆவது சதம் இதுவாகும்.

113 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களை அடித்தார்.

மறுபக்கத்தில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த ஷ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 105 ஓட்டங்களைக் குவித்தார். இது அவரது இரண்டாவது உலகக் கிண்ண சதமாகும்.

சூரியகுமார் யாதவ் (01) ஆட்டம் இழந்த பின்னர் உபாதையிலிருந்து மீண்டு வந்து துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த ஷுப்மான் கில் மேலும் ஒரு ஓட்டத்தைப் பெற்று 80 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களை அடித்தார்.

கே. எல். ராகுல் ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் டிம் சௌதீ 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

398 ஓட்டங்கள் என்ற கடினமாக வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை யும் இழந்து 327 ஓட்டங்களைப் பெற்று 70 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ஆரம்ப வீரர்களான டெவன் கொன்வே, ரச்சின் ரவிந்த்ரா ஆகிய இருவரும் மொஹமத் ஷமியின் பந்துவீச்சில் தலா 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க நியூஸிலாந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. (39 - 2 WC.)

ஆனால், அணித் தலைவர் கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல் ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடனும் வேகமாகவும் துடுப்பெடுத்தாடி இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர்.

டெரில் மிச்செல் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்த அடுத்த பந்தில் கேன் வில்லியம்சன் 69 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். கேன் வில்லியம்சன் 52 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது பிடியைத் தவறவிட்ட மொஹமத் ஷமி, அவரது விக்கெட்டைக் கைப்பற்றி பதிலடிகொடுத்தார்.

வில்லியன்சன், டெரில் மிச்செல் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 181 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

வில்லியம்சனைத் தொடர்ந்து டொம் லெதம் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (220 - 4 WC.)

அதன் பின்னர் ஓட்ட வேகம் சற்று குறைந்தால் நியூஸிலாந்து நெருக்கடிக்குள்ளானது.

எனினும் டெரில் மிச்செலும் க்ளென் பிலிப்ஸும் மீண்டும் ஓட்டவேகத்தை சற்று அதிகரிக்கச் செய்தனர்.

அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது க்ளென் பிலிப்ஸ் 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஆரம்பத்துடுப்பாட்டவீரராக தொடர்ந்து போராடிய டெரில் மிச்செல் 134 ஓட்டங்களைப் பெற்றபோது சமியின் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் 57 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய மொஹமட் ஷமி இப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்!